ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கும்புலான் கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் குத்தகை ஒப்பந்தம் மறு ஆய்வு- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், ஆக 2– குப்பை அகற்றும் சேவையை சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய திடக்கழிவு மற்றும் குப்பைகளை அகற்றுவது தொடர்பில் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கும் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்.

அந்நிறுவனம் பொருத்தமான தொகையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக டிப்பிங் பீஸ் எனப்படும் இழுவைக் கட்டணமும் மறுஆய்வு செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

மற்ற நாடுகளில் ஒப்பந்த நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்துடன் ஒப்பீடு செய்யப்படும். இது தவிர, கடந்த மே முதல் தேதி அமலுக்கு வந்த குறைந்த பட்ச சம்பளத் திட்டத்தையும் நாம் பரிசீலிக்கவுள்ளோம் என்றார் அவர்.

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தப் பின்னர் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கு மானியம் வழங்குவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று முதலாவது சிலாங்கூர் திட்டத் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கு சுமையை ஏற்படுத்தாத வகையிலும் அந்நிறுவனம் குப்பை அகற்றும் பணியை சீராக மேற்கொள்வதை உறுதி செய்வதற்கும் கூடுதல் நிதியை அந்நிறுவனத்திற்கு அளிப்பதற்கான வழிவகைகளை அரசு ஆராய வேண்டும் என பல சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தனர்.


Pengarang :