ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

அரசின் முயற்சிக்கு பலன் கிட்டியது-  சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிப்பு

ஷா ஆலம். ஆக 2- மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் வாயிலாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிலாங்கூர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இது தவிர மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த அறிவாற்றல் பெருகியுள்ளதோடு பொறுப்புணர்வும் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவது தொடர்பில் செய்யப்படும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், இயற்கையைப் பாதுகாப்பதில் அவர்கள் கொண்டுள்ள அக்கறையை இது புலப்படுத்துகிறது என்றார்.

மக்கள் மத்தியில் உயர்ந்த பட்ச விழிப்புணர்வு காணப்படுவதை இந்த மாற்றங்கள் காட்டுகின்றன. பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தத்தையும் மாநில அரசுக்கு இது ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில்  இன்று கோத்தா டாமன்சாரா உறுப்பினர் ஷாத்ரி மன்சோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாநிலத்தில் பசுமைச் சூழலை உருவாக்க கடந்தாண்டில் 24 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மானியத்தின் வழி சுற்றுச்சூழல் தொடர்பான புரிதலை மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. சுற்றுச் சூழல் தொடர்பான திட்டங்களை அமல் படுத்துவோருக்கு விண்ணப்பத்தின் அடிப்படையில் நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :