ECONOMYMEDIA STATEMENTNATIONAL

‘ஓப்ஸ் தாப்பிஸ்’ நடவடிக்கையில் அரசு ஊழியர்கள் உள்பட 4,243 பேர் கைது

கோலாலம்பூர், ஆக 3 – கடந்த மாதம் 27 முதல்  29 ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஐந்தாம் கட்ட சிறப்பு ஓப்ஸ் தாப்பிஸ்  போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 25 அரசு ஊழியர்கள் மற்றும் ஒன்பது மாணவர்கள் உள்பட  4,243 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதினான்கு முதல் 70 வயதுக்குட்பட்ட அந்த 4,243 பேரில் 111 வெளிநாட்டினரும் அடங்குவர் என்று அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர்  டத்தோ நூர்சியா முகமது சாடுடின் தெரிவித்தார்.

கைதானவர்களில் 426 பேர் போதைப்பொருள் விநியோகிப்பாளர்கள், 2,077 பேர் போதைப் பித்தர்கள், 196 பேர் தேடப்படும் நபர்கள் மற்றும் 1,544 பேர் மற்ற குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்றும் அவர் கூறினார்.

இந்நடவடிக்கையில் 99.03 கிலோ மற்றும் 508 லிட்டர்  ஷாபு, கெத்தமின், கெத்தும் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறிய அவர், இதன் மதிப்பு 607,878 வெள்ளியாகும் என்றார்.

இச்சோதனையின் போது மூன்று ஏர் ரைபிள்கள், ஒரு கைத்துப்பாக்கி  30 தோட்டாக்கள், ரொக்கம், நகைகள் மற்றும் வாகனங்கள் உள்பட  811,608 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டன   என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம், 1985 ஆம் ஆண்டு அபாயகர மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் ,1952 ஆம் ஆண்டு விஷச் சட்டம்  மற்றும் 1983 ஆம் ஆண்டு போதைப் பித்தர்கள் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டம்  ஆகியவற்றின் கீழ்  விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை ஓய்வு பகுதிகள், சாலைத் தடுப்புகள், எல்லைகள் மற்றும் சட்டவிரோத தளங்கள் உள்ளிட்ட  201 இடங்களில் இச்சோதனைகளை மேற்கொண்டதாக நூர்சியா கூறினார்.


Pengarang :