ECONOMYNATIONALSELANGOR

சுங்கை காண்டீஸ் தொகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை- 1,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், ஆக 7- சுங்கை காண்டீஸ் தொகுதியில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்திற்கு வட்டார பொது மக்களிடமிருந்து சிறப்பான ஆதரவு கிடைத்தது.

கெமுனிங் உத்தாமாவிலுள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இந்நிகழ்வு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் காலை 8.00 மணி முதலே மக்கள் வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது.

மாலை 3.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் 1,000 பேர் வரை கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

வாட்ஸ்ஆப் புலனம், சமூக ஊடகங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் வாயிலாக செய்யப்பட்ட விளம்பரம் காரணமாக இந்த பரிசோதனை இயக்கதில் பங்கு கொள்ள அதிகமானோர் வந்திருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்து விதமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவைப்படும் 3,000 வெள்ளியை மிச்சப்படுத்துவதற்குரிய வாய்ப்பினை இந்த இலவச பரிசோதனை இயக்கம் வழங்குவதால் அதில் பங்கு கொள்ள பெரும்பாலோர் ஆர்வம் காட்டினர் என்றார் அவர்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் தொற்றா நோய்களான புற்றுநோய், கண் பரிசோதனை ஆகியவற்றோடு பிஸியோதெராப்பி சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

இந்த  இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள்ள மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் வழி சுமார் 39,000 பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் தொடங்கி இதுவரை மாநிலத்தின் 30 தொகுதிகளில் இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கம் நடத்தப்பட்டுள்ளது.


Pengarang :