ECONOMYMEDIA STATEMENT

வெ. 13 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்- ஆறு ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், ஆக 10– போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது கார் ஒன்றிலிருந்து சுமார் 13 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 38.361 கிலோ மெத்தம்பெத்தமின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு இரு பெண்கள் உள்பட அறுவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று நண்பகல், தலைநகர், ஜாலான் துன் இஸ்மாயிலில் ஹோண்டா சிட்டி ரகக்கார் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெலிஹான் யாஹ்யா கூறினார்.

அப்பகுதியில் குற்றச்செயல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்கார்கள் ஹோண்டா சிட்டி மற்றும் டோயோட்டா வெல்பயர் வாகனங்கள் மீது சந்தேகம் கொண்டு அவற்றை தடுத்து நிறுத்தியதாக அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

அச்சோதனையின் போது ஹோண்டா சிட்டி காரின் பின்புறப் பகுதியில் மெத்தம்பெத்தமின் ரக போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதோடு அக்காரிலிருந்த ஆடவர் ஒருவரிடம் மேலும் 1.7 கிராம் போதைப் பொருள் இருப்பதும் கண்டறியப்பட்டது என்றார் அவர்.

கிழக்கு கரை மாநிலத்திலிருந்து வந்ததாக நம்பப்படும் அந்த அவ்விரு வாகனங்களில் இருந்த ஐவரை தாங்கள் கைது செய்த வேளையில் மேலும் ஒரு ஆடவர் மாலை 6.15 மணியளவில் ஜாலான் சண்டானாவில் கைது செய்யப்பட்டார் என அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.


Pengarang :