ECONOMYSELANGOR

பி.கே.பி.எஸ். ஏற்பாட்டிலான மலிவு விற்பனை ஆண்டு இறுதி வரை 160 இடங்களில் நடைபெறும்

ஷா ஆலம், ஆக 10- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனை மாநிலத்தின் 160 இடங்களில் ஆண்டு இறுதி வரை நடைபெறும்.

இந்த மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் வட்டார சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் லாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அக்கழகத்தின் சந்தைப் பிரிவு தலைமை நிர்வாகி முகமது ஃபாஸிர் அப்துல் லத்திப் கூறினார்.

சந்தையைவிட குறைவான விலையில் முட்டை, கோழி போன்ற உணவுப் மூலப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் இந்த விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இது தவிர, உறையவைக்கப்பட்ட இறைச்சி, மீன், சமையல் எண்ணெய் ஆகியவற்றோடு பி.கே.பி.எஸ்.சின் சொந்த வெளியீடுகளான சார்டின், பிஸ்கட் போன்றவையும் விற்பனைக்கு வைக்கப்படும் என்றார் அவர்.

ஒவ்வொரு இடத்திலும் 5,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரையிலான விற்பனையை பதிவு செய்ய தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு இறுதியில் இந்த மலிவு விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் பொது மக்களிடமிருந்து தங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :