ECONOMYMEDIA STATEMENT

2,000க்கும் மேற்பட்ட போலி துப்பாக்கிகளை ஆன்லைனில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11: ஒரு நபரிடம் இருந்து 318,520 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான 2,105 போலி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து, தலை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நேற்றும் இன்றும் சோதனை நடத்தினர்.

காலை 11 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளால் ஜின்ஜாங்கின் தாமான் புசாட் கெபோங் பகுதியில் 26 வயது இளைஞனைக் கைது செய்ததைத் தொடர்ந்து இந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி பெ எங் லாய் தெரிவித்தார்.

அந்த நபரையும் அவரது வாகனத்தையும் சோதனை செய்ததன் விளைவாக, காரின் முன் மற்றும் பின் பயணிகள் இருக்கைகளில் 25 போலி துப்பாக்கிகள், இரண்டு பொம்மை துப்பாக்கிகள் மற்றும் 480 பிளாஸ்டிக் தோட்டாக்கள் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்.

“கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணியளவில், ஜின்ஜாங்கின் தாமான் ஃபடாசன் மற்றும் தாமான் மெகா கெபோங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் முடிவில், அந்த இடம் போலி துப்பாக்கிகள் வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் 731 போலி துப்பாக்கிகள், 198 போலி ரைபிள் துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு வகையான 1,149 போலி ரைபிள் துப்பாக்கிகள் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் விசாரணையில் அந்த நபர் சீனாவில் இருந்து பொருட்களை வாங்குவதன் மூலம் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆன்லைனில் பல்வேறு போலி ஆயுத பொம்மைகளை விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருவது தெரியவந்தது என பெ கூறினார்.

“போலி துப்பாக்கிகள் ஷேப்பி மற்றும் லாசாடா போன்ற பல ஆன்லைன் வணிக பயன்பாடுகள் மூலம் ஒரு யூனிட்டுக்கு RM50 முதல் RM200 வரை விற்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

ஆயுதச் சட்டம் 1960 இன் பிரிவு 36 (1) மற்றும் குடிநுழைவு சட்டத்தின் பிரிவு 6 (1) (C) இன் படி விசாரணைக்காக அந்த நபர் இந்த வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.


Pengarang :