ECONOMYNATIONALSUKANKINI

சிறப்பான புரிந்துணர்வே வெற்றிக்கு வித்திட்டது- பூப்பந்து வீராங்கனை தீனா கூறுகிறார்

கிள்ளான், ஆக 12– தமக்கும் சக ஆட்டக்காரர் பியெர்லி டானுக்கும் இடையே கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் அணுக்கமான நட்புறவே காமன்வெல்த் பூப்பந்துப் போட்டியில் தாங்கள் தங்கம் வெல்வதற்கு காரணமாக இருந்தது என்று நாட்டின் முன்னணி பூப்பந்து வீராங்கனை எம்.தீனா கூறுகிறார்.

அரங்கில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இந்த நீண்ட கால நட்பு பெரிதும் துணைபுரிந்தது என்று அவர் சொன்னார்.

புக்கிட் ஜாலில் விளையாட்டுப் பள்ளியில் சேர்வதற்கு முன்பிருந்தே பியெர்லி டானை எனக்குத் தெரியும். தொடக்கத்தில் நான் ஒற்றையர் பிரிவில் விளையாடி பின்னர் இரட்டையர் பிரிவுக்கு மாறினேன் என்று அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துள்ளோம். எனது பிரச்னைகளை அவருடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் ஒன்றாகவே இருந்துள்ளோம். இந்த அணுக்கமான புரிந்துணர்வே எங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது என்றார் அவர்.

காமன்வெல்த் போட்டியில் பெற்ற வெற்றிக்காக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜிடமிருந்து வெகுமதி பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் பூப்பந்துப் போட்டியில் எம்.தீனா- பியெர்லி டான் இணை தங்கப்பதக்கம் வென்றது.


Pengarang :