ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மானிய விலை டீசல் மோசடி கும்பல் முறியடிப்பு- 15 பேர் கைது 

ஷா ஆலம், ஆக 12- உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு அண்மையில் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் ஐந்து லட்சம் வெள்ளி மதிப்பிலான 26,050 லிட்டர் மானிய விலை டீசல் கைப்பற்றப்பட்டது.

காவல் துறையின் உதவியுடன் இம்மாதம் 9 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை செமினி, காப்பார், கோத்தா டாமன்சாரா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கப் பிரிவின் தலைமை அதிகாரி முகமது கைரி ஜமாலுடின் கூறினார்.

இச்சோதனை நடவடிக்கையின் போது மானிய விலை டீசலை முறைகேடாக பயன்படுத்தியாக நம்பப்படும் 20 முதல் 40 வயது வரையிலான 15 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு 10 லட்சம்  வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்றாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.


Pengarang :