ECONOMYNATIONAL

உள்நாட்டு வாணிக அமைச்சின் சோதனைகளில் வெ.24 லட்சம் மதிப்புள்ள சமையல் எண்ணெய் பறிமுதல்

கோலாலம்பூர், ஆக 14- உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கடந்த ஜூலை 1 தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை மேற்கொண்ட ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனைகளில் 24 லட்சத்து 13 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இக்காலக்கட்டத்தில் சமையல் எண்ணெய் விற்பனை சம்பந்தப்பட்ட 126 புகார்களை நாடு முழுவதுமிருந்து தாங்கள் பெற்றதாக அமைச்சின் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் அஸ்மான் ஆடாம் கூறினார்.

மானிய விலை பாக்கெட் சமையல் எண்ணெயை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்தது, தகுதி இல்லாத மற்றும் லைசென்ஸ் இல்லாத தரப்பினருக்கு அந்த உணவு மூலப்பொருளை விற்றது ஆகியவையும் அக்குற்றங்களில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

இது தவிர, சமையல் எண்ணையை பதுக்கியது மற்றும் லைசென்ஸ் இல்லாத இடங்களுக்கு அவற்றை மாற்றியது போன்ற குற்றங்களும் இந்நடவடிக்கையின் போது அடையாளம் காணப்பட்டன என்று அவர் சொன்னார்.

நேற்று பத்துகேவ்சில் உள்ள பேரங்காடி ஒன்றில் சோதனை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சுமார் 32 விழுக்காட்டு வணிகர்கள் சமையல் எண்ணையை நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 17 விழுக்காடாக இருந்தது என்றார் அவர்.


Pengarang :