ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் திவாலாகும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது- மேலவையில் தகவல்

கோலாலம்பூர், ஆக 15– நாட்டில் திவாலாகும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து வருவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ தீ லியான் கெர் கூறினார்.

கடந்த 2020 முதல் 2022 ஜூன் மாதம் வரை 10,137 இளைஞர்கள் திவாலானதை மலேசிய திவால்நிலை  துறையின் தரவுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.

இருப்பத்தைந்து வயதுக்கும் கீழ்ப்பட்ட இளைஞர்கள் மத்தியிலும் திவாலாகும் சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடந்த 2020 இல் 21 ஆக இருந்த திவாலானோர் எண்ணிக்கை கடந்தாண்டு 20 ஆகவும் இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஆறாகவும் குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

அதே சமயம், 25 முதல் 34 வயது வரையிலானோர் மத்தியிலும் திவால் எண்ணிக்கை சரிவு கண்டுள்ளது. கடந்த 2020 இந்த எண்ணிக்கை 1,741 ஆகவும் 2021இல் 1,060 ஆகவும் இவ்வாண்டு ஜூன் வரை 425 ஆகவும் பதிவானது என்றார் அவர்.

இதுதவிர 35 முதல் 44 வயது வரையிலானோரில் 3,150 கடந்த 2020 ஆம் ஆண்டில் திவாலான வேளையில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 2,535 ஆகவும் இவ்வாண்டு ஜூன் வரை 1,179 ஆகவும் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலவையில் இன்று செனட்டர் அஜிஸ் அரிபின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் திவாலான இளைஞர்களின் எண்ணிக்கை மற்றும் திவாலானதற்கான காரணம் குறித்து அஜிஸ் கேள்வியெழுப்பியிருந்தார்.

தனிப்பட்ட கடன், வீட்டுக் கடன், கிரடிட் கார்டு கடன், உள்நாடு வருமான வரி கடன், இ.பி.எஃப். செலுத்த தவறியது, கல்விக் கடன், உத்தரவாதம் ஆகியவை திவாலானதற்கான காரணங்களாக விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.


Pengarang :