ECONOMYMEDIA STATEMENT

கைப்பேசியை பயன்படுத்தும் போது மின்சாரம் தாக்கியது- 12 வயது சிறுமி பரிதாப மரணம்

குவா மூசாங், ஆக 16- கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதால் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் லோஜிங், கம்போங் பாரு சுங்கை ராயா லுவாரில் நேற்று மாலை 4.50 மணியளவில் நிகழ்ந்தது.

இடியுடன் கூடிய அடைமழை பெய்து கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.

நுர் அஷ்கின் கிஸ்தினா என்ற அந்த சிறுமி படுக்கையறையில் நினைவிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த சிறுமியின் தந்தை தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது பலத்த இடிச் சத்தத்தைக் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படவே வீட்டிலுள்ள சோலார் இன்வெர்ட்டரை சரி செய்வதற்கு டெக்னீஷியனை அழைத்துள்ளார். அந்த சாதனம் மின்னல் தாக்குதலால் பழுதடைந்ததை டெக்னீஷியன் கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில் நுர் அஷ்கின் படுக்கையறையில் நினைவிழந்த நிலையில் கிடப்பதை அவரின் தாயார் கண்டுள்ளார். படுக்கையறையை நன்கு சோதித்த போது சார்ஜருடன் இணைக்கப்பட்ட நிலையில் கைபேசி அவரின் அருகே இருந்துள்ளதோடு அவரின் வலது கையில் தீக்கான தழும்பும் தலையணையில் தீப்பற்றியதற்கான அடையாளமும் காணப்பட்டது என்று சிக் சூன் தெரிவித்தார்.

அச்சிறுமியை அவரின் பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள சுகாதார கிளினிக்கிற்கு கொண்டுச் சென்றதாக கூறிய அவர், அச்சிறுமி இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்றார்.


Pengarang :