ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆப்பிரிக்க விபசார கும்பலின் மறைவிடம் மீது அதிரடிச் சோதனை- பத்து பேர் கைது

சைபர் ஜெயா, ஆக 18– ஆப்பிரிக்க விபசார கும்பலின் உறைவிடமாக விளங்கி வந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் மீது நேற்று அதிரடி சோதனை மேற்கொண்ட குடிநுழைவுத் துறையினர் பத்து அந்நிய நாட்டுப் பெண்களை கைது செய்தனர்.

இந்நடவடிக்கையின் போது விபசாரம் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 23 முதல் 37 வயது வரையிலான எழு டான்சானியா பெண்களும் மூன்று உகாண்டா நாட்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ட்சைமி டாவுட் கூறினார்.

டான்சானியா மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் இந்த விபசாரத் தொழிலில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்தவர்கள் என்றும் ஒருவர் தலைநகரில் உள்ள மொழி பயிற்சி மையத்தின் மாணவி என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் நைஜீரிய இளைஞர்களை இலக்காக கொண்டு விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இக்கும்பல் ஒவ்வொரு முறையும் சேவை வழங்குவதற்கு வெ. 200 முதல் வெ.500 வரை கட்டணம் வசூலித்து வந்துள்ளது என்றார் அவர்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் மற்றும் மாணவர்களைக் கொண்ட விபசார கும்பல்கள் செயல்படுவதற்குரிய சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அதிரடிச் சோதனையின் தொடர்ச்சியாக இந்த விபசார கும்பலின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :