ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

திடீர் வெள்ளம் ஏற்பட்டதற்கு அதிகப்படியான மழைப் பொழிவே காரணம்- இஷாம் ஹாஷிம் கூறுகிறார்

ஷா ஆலம், ஆக 24- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் கடந்த சனிக்கிழமை திடீர் வெள்ளம் ஏற்பட்டதற்கு 92.5 மில்லி மீட்டர் அளவுக்கு அதிகப்படியான மழை பெய்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

நண்பகல் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீடித்த இந்த மழைப்பொழிவு ஒரு மணி நேரத்தில் மிக அதிகமாக அதாவது 59.5 மில்லி மீட்டராக பதிவானது என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதற்கு நீர் தடுப்பணையின் மதகு திறக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனக் கூறப்படுவதை அவர் நிராகரித்தார்.

நீர் பெருக்கு மற்றும் தணிப்பு மதகு மற்றும் நீர் இரைப்பு பம்ப் கருவியின் செயலாக்கத்தை நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கேற்ப (எஸ்.ஒ.பி.) வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்கள் தொடர்பில் நேற்று இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்த போது சுங்கை ராசாவ் ஆற்றிலும் ஸ்ரீ மூடாவிலுள்ள கால்வாய்களின் அளவைக் காட்டிலும் அதிகப்படியாக நீர் பெருக்கெடுத்த காரணத்தால் மதகை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர் விளக்கினார்.

அதே நேரத்தில் கடல் பெருக்கு காரணமாக கிள்ளான் ஆற்றிலும் நீர் பெருக்கெடுத்து காணப்பட்டது. எனினும், வடிகால் நீர்ப்பாசனத் துறை நீர் இறைக்கும் பம்ப் கருவிகளை இயக்கி நீரை வெளியேற்றிய காரணத்தால் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.

ஒரு விநாடிக்கு 8,960 லிட்டர் நீரை இறைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்ட அனைத்து பம்ப் இயந்திரங்களும் இயக்கப்பட்டதன் மூலம் ஸ்ரீ மூடாவிலுள்ள கால்வாய்களில் நீரின் அளவு வெகுவாக குறையத் தொடங்கியது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :