ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலி அழைப்புகளைக் கண்டறியும் புதிய செயலி- பயனீட்டாளர்கள் தரவுகளை பாதுகாக்கிறது

ஷா ஆலம், ஆக 25– போலி தொலைபேசி அழைப்புகளைக் கண்டறியக்கூடிய ‘வூஸ்கோல்‘ எனப்படும் புதிய  செயலியை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகோலுக் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை எந்த தரப்பினராலும் ஊடுருவ முடியாது என்ற உத்தரவாதத்தையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த செயலி கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் பயனீட்டாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு இச்செயலி தைவான், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுவதாக அந்நிறுவனத்தின்  மலேசியாவுக்கான நிர்வாக இயக்குநர் ஜிம் சீ கூறினார்.

இதே போன்ற சேவையை வழங்கும் மற்ற செயலிகளைக் காட்டிலும் வூஸ்கோல் செயலி தனித்துவமிக்கதாக விளங்குகிறது. பயனீட்டாளர்களின் தகவல்கள் கசியாது என்பதோடு மோசடி நடவடிக்கைகளுக்கு பலியாகாமலிருப்பதையும் உறுதி செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தரவு பாதுகாப்புக்காக கடந்தாண்டில் தர மேலாண்மை முறைக்கான ஐ.எ.ஸ்.ஒ. சான்றிதழையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற இணைய வழி மோசடிக்கு எதிரான விழிப்புணர்வு ஆய்வரங்கின் போது பயனீட்டாளர் விவகாரம் மற்றும் ஹலால் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி இந்த செயலியை அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலியை தற்போது 800,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் அறிமுக நிகழ்வையொட்டி மாநில அரசு மற்றும் துணை நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு இந்த செயலி இலவசமாக வழங்கப்படும் என்றார் அவர்.


Pengarang :