ECONOMYMEDIA STATEMENT

மூதாட்டி கற்பழித்துக் கொலை- வேலையில்லா நபருக்கு மரண தண்டனை

ஷா ஆலம், ஆக 26- எண்பத்தைந்து வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொண்டு படுகொலை செய்த குற்றத்திற்காக வேலையில்லா ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் குற்றப்பட்டவர் நிரபராதி என்பதை எதிர்த்தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து கே.சத்தியராஜ் (வயது 30) என்ற அந்த ஆடவருக்கு எதிராக நீதிபதி டத்தோ அப்துல் கரீம் அப்துல் ரஹ்மான் இத்தீர்ப்பை வழங்கினார்.

அம்மூதாட்டிக்கு காயம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அவ்வாடவர் கொண்டிருந்ததோடு தெளிவான மனநிலையில் அவர் அவ்வாறு செய்துள்ளார் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கையில் என்ன நடந்தது என்பதை விவரிப்பதற்கும் நினைவுக் கூர்வதற்கும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எந்த சிக்கலையும் எதிர்நோக்கவில்லை. கொள்ளையிடும் நோக்கில் அவ்வாடவர் வீட்டினுள் நுழைந்துள்ளார். அம்மூதாட்டியின் வாய் மற்றும் கைகளை கட்டுவதன் மூலம் அவர் கூச்சலிடுவதை தடுக்க முடியும் என்பதையும் உணர்ந்துள்ளார்.

கைகளைக் கட்டுவதன் மூலம் வாயில் திணிக்கப்பட்ட துணியை அம்மூதாட்டியினால் அகற்ற முடியாது என்பதையும் குற்றம்சாட்டப்பட்டவர் அறிந்திருக்கிறார் என தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி காலை மணி 11.40க்கும் பிற்பகல் மணி 1.00க்கும் இடையே அம்பாங், கம்போங் தாசேக் தம்பாஹானில் உள்ள வீடொன்றில் அந்த மூதாட்டியைக் கொலை செய்ததாக சத்தியராஜ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.


Pengarang :