ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேராக் போலீசாரின் அதிரடிச் சோதனையில் ஐவர் கைது- வெ. 66 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

ஈப்போ, ஆக 29 – தாப்பாவின் செண்டேரியாங்கில் உள்ள ஒரு கிடங்கில் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் இரண்டு சகோதரர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து சுமார் 66 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆண்டு பேராக் மாநில காவல்துறையினர்  நடத்திய மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல் நடவடிக்கை இதுவாகும் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி விவரித்தார்.

காலை 9.45 மணியளவில் அந்த கிடங்கில் நடத்தப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருட்களை பதப்படுத்திக் கொண்டிருந்த 29 மற்றும் 33 வயதுடைய ஐந்து ஆடவர்களை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சோதனையின் போது சுமார் 110 கிலோ எடையுள்ள மெத்தாம்பெத்தமைன்  போதைப் பொருள், போதைப் பொருளை பதப்படுத்துவதற்கு  பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர் என்று அவர் இங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மொத்தம் 161,000 வெள்ளி மதிப்புள்ள இரண்டு வாகனங்கள், நான்கு நெக்லஸ்கள், பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் காதணிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

சந்தேக நபர்களில் மூன்று பேர் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்து சோதனையில் தெரியவந்தது. அவர்களில் நான்கு பேர் குற்றவியல் பதிவுகளைக் கொண்டிருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

இக்கும்பல் கடந்த ஜூன் முதல் தீவிரமாக  செயல்பட்டு வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார் அவர்.

வேலையில்லாத அந்த சந்தேக நபர்கள் அனைவரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாக அவர் கூறினார்.


Pengarang :