ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்க் கண்டவர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் 17.9 விழுக்காடு குறைந்தது

கோலாலம்பூர், ஆக 30- இம்மாதம் 21 முதல் 27 ஆம் தேதி வரையிலான 34வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 17.9 விழுக்காடு குறைந்து 18,715 ஆகப் பதிவானது.

எனினும், அக்காலக்கட்டத்தில் இந்நோய்த் தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் 7.1 விழுக்காடு அதிகரித்து 60ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த 34வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 5.4 விழுக்காடு குறைந்து 25,037 ஆக ஆகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தீவிர தாக்கம் உள்ள நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கடந்த 34வது நோய்த் தொற்று வாரத்தில் 1.39 விழுக்காடு குறைந்து 36,179 ஆகப் பதிவானது என்று கோவிட்-19 நடப்பு நிலவரம் தொடர்பில் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

இந்த 34வது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களின் பயன்பாடு 2 விழுக்காடும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அல்லாத கட்டில்களின் பயன்பாடு 3 விழுக்காடும் குறைந்துள்ளது. அதே சமயம், பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் கட்டில்களின் பயன்பாடு ஒரு விழுக்காடும் குறைந்துள்ளது என்றார் அவர்.

செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் 34 வது நோய்த் தொற்று வாரத்தில் 0.3 விழுக்காடு குறைந்துள்ளது என்று நோர் ஹிஷாம் சொன்னார்.


Pengarang :