ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரோஸ்மா ஊழல் வழக்கில் நீதிபதியை மீட்டுக் கொள்ள வேண்டுமா? அரசுத் தரப்பு எதிர்ப்பு

கோலாலம்பூர், செப் 1- ஹைப்ரிட் சோலார் திட்டம் சம்பந்தப்பட்ட 125 கோடி வெள்ளி ஊழல் வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி முகமது ஜைனி மஸ்லானை மீட்டுக் கொள்ளக் கோரி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் செய்திருந்த விண்ணப்பத்திற்கு அரசுத் தரப்பு இன்று ஆட்சேபம் தெரிவித்தது.

மூன்றாம் தரப்பினரால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு என நம்பப்படும் ஆவணம் பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் கடந்த 26 ஆம் தேதி பிரசுரமானதன் அடிப்படையில் இந்த மனுவை கடைசி நேரத்தில் ரோஸ்மா தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் (ரோஸ்மா) தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அந்த அம்பலமான தீர்ப்பு, எழுத்துப்பூர்வ தீர்ப்பே கிடையாது என்று அரசுத் தரப்பின் மூத்த வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் தனது வாதத்தில் கூறினார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற ஆய்வுப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஆய்வு மற்றும் கருத்து அடிப்படையிலான படிவமே அந்த ஆவணம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

செவிவழிச் செய்தியின் அடிப்படையில் மட்டுமே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி முகமது ஜைனிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு எந்தவொரு வலுவான ஆதராமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஆகவே, இந்த மனுவை நாங்கள் ஆட்சேபிப்பதோடு பிரதிவாதிக்கு எதிரான தீர்ப்பை வழங்குவதை ஒத்தி வைப்பதையும் நான் எதிர்க்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்த மனு தொடர்பில் ஆதாரங்களைத் திரட்ட தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த வழக்கை ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று ரோஸ்மாவின் வழக்கறிஞர் டத்தோ ஜக்ஜிட் சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

ரோஸ்மாவுக்கு எதிரான ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :