ECONOMYMEDIA STATEMENT

கினபத்தாங்கான் எம்.பி.  பூங் மொக்தார் ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு

கோலாலம்பூர், செப் 2 – கினபத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ பூங் மொக்தார் ராடின் மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஜிஸி இசெட் அப்துல் சாமாட் ஆகியோரை, 28 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பதா அல்லது  தற்காப்பு வாதம் புரிய உத்தரவிடுவதா என்பது குறித்து செஷன்ஸ் நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோசினா அயோப் பிற்பகல் 3.00 மணிக்கு தனது தீர்ப்பை வழங்க உள்ளார்.

பூங் மொக்தார் மற்றும் ஜிஸி இசெட்டே எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தால் அவ்விருவரும் எதிர்வாதம் செய்ய அழைக்கப்படுவார்கள். இல்லையேல், அவ்விருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கிய இந்த  விசாரணையில் சாட்சியமளிக்க 30 சாட்சிகளை அழைத்த அரசுத் தரப்பு கடந்த  மே 17ஆம் தேதி வழக்கை முடித்துக்கொண்டது.

சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட அரசுத் தரப்பு சாட்சிகளில், முன்னாள் நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அகமட் ஹுஸ்னி முகமட் ஹனாட்ஸ்லா, முன்னாள் ஃபெல்கிரா இன்வெஸ்ட்மென்ட் பொது மேலாளர் அட்னான் யூசோப், ஃபெல்க்ரா வாரிய உறுப்பினர் டாக்டர் ஹபிபா சுலைமான், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) உதவி கண்காணிப்பாளர் நார்ஷரில், சஹாரோம் ஆகியோர் அடங்குவர்.

அரசுத் தரப்பில் இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர்கள் டத்தோ ஃபரிட்ஸ் கோஹிம் அப்துல்லா, முகமட் சோபியான் ஜக்காரியா மற்றும் லா சின் ஹவ் ஆகியோர் நடத்துகின்றனர்.

அதே சமயம், பூங் மொக்தார் சார்பில் வழக்கறிஞர் எம். ஆதிமூலமும்  ஜிஸி இசெட் சார்பில் டத்தோ கே.குமரேந்திரன் மற்றும் ரித்தா அப்தா சுப்ரியும் ஆஜராகின்றனர்.


Pengarang :