ECONOMYMEDIA STATEMENT

பகடிவதையில் ஈடுபட்டதாக ஒன்பது மாணவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், செப் 5- பகடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட இங்குள்ள உறைவிடப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

பதினான்கு வயது மாணவனுக்கு கடும் காயங்கள் ஏற்படக் காரணமாக இருந்ததாக 17 வயதான அந்த ஒன்பது பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் ஜாலான் சங்காட் ஜோங்கில் உள்ள இடைநிலைப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 325வது பிரிவு மற்றும் அதே சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் 34வது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த மாஜிஸ்திரேட் நுர் ஃபைசா முகமது சாலே, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் தலா 2,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.


Pengarang :