ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அப்துல் அஜிஸ் மீதான 9 குற்றச்சாட்டுகளை நிலை நிறுத்தியது அப்பீல் நீதிமன்றம்- 4 குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

புத்ரா ஜெயா, செப் 5- தமக்கெதிராக சுமத்தப்பட்ட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆறு சட்ட விரோத பண பரிமாற்றக் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரி தாபோங் ஹாஜி முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அஜிஸ் அப்துல் ரஹிம் செய்து கொண்ட மனுவை இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அப்துல் அஜிசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அந்த ஒன்பது வழக்குகளும் குறைபாடு கொண்டவை அல்ல என்று நீதிபதி டத்தோஸ்ரீ கமாலுடின் முகமது சைட், நீதிபதி டத்தோ அபு பாக்கார் ஜாயிஸ் மற்றும் நீதிபதி டத்தோ சே முகமது ருஸிமா கசாலி ஆகியோரடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த ஏகமனதான முடிவை அறிவித்த நீதிபதி அபு பாக்கார், அப்துல் அஜிசுக்கு எதிரான அந்த ஒன்பது குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

எனினும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் அப்துல் அஜிஸ் மீது சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பேராக் மற்றும் கெடாவில் சாலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக 52 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளையும்  மெனுஜூ அசாஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து பெற்ற 1 கோடியே 39 லட்சம் வெள்ளியை சட்டப்பூர்வமாக்க முயன்றது தொடர்பில் 10 குற்றச்சாட்டுகளையும் அப்துல் அஜிஸ் எதிர்நோக்கியிருந்தார்.

மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளையும் பத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்யக் கோரி தாம் செய்து கொண்ட மனுவை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.


Pengarang :