ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செமினியில் மானிய விலை டீசல் மோசடி கும்பல் முறியடிப்பு- 11 பேர் கைது

உலு லங்காட், செப் 5- இங்குள்ள ஜாலான் செமினியில் கடந்த  வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில் மானிய விலை டீசல்  பதுக்கலில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்தனர்.

இந்நடவடிக்கையின் போது 94,450 லிட்டர்  டீசல் பறிமுதல் செய்யப்பட்டதோடு அக்கும்பலைச் சேர்ந்த 11 பேரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை உளவுப் பிரிவு மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் டிரோன் பிரிவு ஆகியவை இரு கிடங்குகள் மீது அதிரடிச் சோதனையை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

இச்சோதனையின் போது லோரி ஓட்டுநர்களாகவும் பொது வேலையாட்களாகவும் பணி புரிந்து வந்த 19 முதல் 59 வயது வரையிலான நான்கு அந்நிய நாட்டினர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த கும்பல் கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாக கூறிய அவர், மாற்றியமைக்கப்பட்ட லாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் காஜாங் வட்டாரத்திலுள்ள பெட்ரோல் நிலையங்களில் உதவித் தொகை வழங்கப்பட்ட டீசலை வாங்குவது வழக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் அந்த டீசல் அந்த கிடங்கிலுள்ள  பெரிய டாங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டு தொழில்துறையினருக்கு  லிட்டர் ஒன்றுக்கு 4.00 வெள்ளி முதல் 5.00 வெள்ளி வரையிலான விலையில் அக்கும்பல் விற்று வந்ததாக அவர் கூறினார்.


Pengarang :