ECONOMYMEDIA STATEMENT

ஆறு மாதக் குழந்தையை கொலை செய்ததாக தாயார் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப் 5– கம்போங் கிள்ளான் கேட்டில் உள்ள வீடொன்றில் தனது ஆறு மாதக் குழந்தையை  கொலை செய்ததாக தனியார் நிறுவனத்தின் குமாஸ்தா மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜைனா மிஸ்டின் (வயது 34) என்ற அந்த மாதுவுக்கு எதிராக மாஜிஸ்திரேட் அமாலினா பஷிரா முகமது டோப் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. குற்றச்சாட்டை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவர் தலையை அசைத்தார்.

கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் கம்போங், கிள்ளான் கேட், ஜாலான்  செலாடாங் 2 எனும் முகவரியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக உள்ள ஆடவர் ஒருவருடன் சேர்ந்து இக்குற்றத்தைப் புரிந்ததாக அப்பெண்மணி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த வழக்கின் மறு விசாரணையை நீதிமன்றம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. துணை பப்ளிக் புரோசிகியூட்டர்  நுருள் அமீரா சாம் கமாருடின் வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் சுவிண்டர் சிங் ஆஜராகிறார்.


Pengarang :