ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 16.9 விழுக்காடு குறைந்தது

கோலாலம்பூர், செப் 5- கடந்த மாதம் 28 முதல் இம்மாதம் 3 ஆம் தேதி வரையிலான 35வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை 16.9 விழுக்காடு குறைந்து 15,549 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த 34வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 18,715 ஆக இருந்தது.

இக்காலக்கட்டத்தில் இந்நோய்த் தொற்று தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை 21.7 விழுக்காடு குறைந்து 47 ஆக ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அதே சமயம் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்த வாரம் அதிகரிப்பைக் கண்டுள்ளதாக கூறிய  அவர், 34வது நோய்த் தொற்று வாரத்தில் 19,813 ஆக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35வது வாரத்தில் 20.9 விழுக்காடு அதிகரித்து 25,037 ஆக ஏற்றம் கண்டுள்ளது என்றார்.

கடந்த 35வது வாரத்தில் தீவிர தாக்கம் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை 13.4 விழுக்காடு வீழ்ச்சி கண்டு 31,333 ஆக ஆகியுள்ளது என்றார் அவர்.

கோவிட்-19 நடப்பு நிலவரங்கள் தொடர்பில் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மருத்துவமனைகள் மற்றும் பி.கே.ஆர்.சி. எனப்படும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்க்கப்படும் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட நோயாளிகளின் விகிதாச்சாரம் 100,000 பேருக்கு 9.4 விழுக்காடாக இருந்தது. அதே சமயம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 3.6 விழுக்காடு குறைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :