ECONOMYSELANGORTOURISM

ஜூலை 1 ஆம் தேதி முதல் இதுவரை 32 சுற்றுலா கப்பல்கள் கிள்ளான் துறைமுக சுற்றுலா முனையம் வந்தன

கிள்ளான், செப் 5- போர்ட் கிள்ளான் க்ருஸ் டெர்மினல் (பி.கே.சி.டி.) கடந்த ஜூலை முதல் தேதி  சேவையைத் தொடங்கியது முதல் இதுவரை 32 சுற்றுலா கப்பல்கள் மூலம் 73,924 சுற்றுப்பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

இந்த கப்பல்களின் வருகையானது கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக  கடந்த ஈராண்டுகளாக முடங்கிக் கிடந்த கடல் சார் சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர்  பெற்றுள்ளதை புலப்படுத்துவதாக உள்ளது என்று பி.கே.சி.டி. தலைவர் டத்தோ அஸ்மான் ஷா முகமது யூசுப் கூறினார்.

ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீ  சுற்றுலாக் கப்பல் இத்துறைமுகத்திற்கு வந்தது ஒரு வரலாற்றுப் பூர்வ நிகழ்வாகும். முன்னதாக ரிசோர்ட் வோர்ல்ட் க்ருசஸ் நிறுவனத்தின்  கெந்திங் ட்ரீம் கப்பல் கடந்த ஜூலை 4 ஆம் தேதி இந்த துறைமுகத்தை அடைந்தது என்றார் அவர்.

இந்த சுற்றுலா கப்பல் சேவைக்கு உள்நாட்டு சுற்றுப்பயணிகளிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

பூலாவ் இண்டாவில் அமைந்துள்ள இந்த பி.கே.சி.டி முனையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இந்த முனையத்தை திறந்து வைத்தார்.

அதிகமான பயணிகள் மற்றும் கப்பல்களை கையாள்வதற்கு ஏதுவாக இந்த முனையத்தை மேலும் விரிவுபடுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அஸ்மான் தனது உரையில் கூறினார்.


Pengarang :