ECONOMYMEDIA STATEMENT

டிரெய்லர் லோரியில் தீ- ஐந்து புதிய ஹோண்டா கார்கள் அழிந்தன

சிரம்பான், செப் 7– வாகனங்களை ஏற்றியிருந்த டிரெய்லர் லோரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து புதிய ஹோண்டா ரகக் கார்கள் முற்றாக அழிந்தன. இச்சம்பவம், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 227.2வது கிலோமீட்டரில் நேற்று மாலை நிகழ்ந்தது.

மாலை மணி 5.24 அளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி ஹஸ்ரி முகமது கூறினார்.

முப்பத்தோரு வயது நிரம்பிய ஓட்டுநர் செலுத்திய அந்த டிரெய்லர் ஆறு புதிய ஹோண்டா கார்களை தொழிற்சாலையிலிருந்து ஏற்றிக் கொண்டு பினாங்கு நோக்கி சென்று கொண்டிருந்த போது இத்தீபத்து ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த டிரெய்லர் லோரியின் பிரேக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் பின்புறத்தில் தீ ஏற்பட்டது. பின்னர் அத்தீ அதிலிருந்த கார்களுக்கும் பரவியது.

இச்சம்பவத்தில் ஐந்து கார்கள் கடுமையாக சேதமடைந்த வேளையில் ஒரு கார் பத்து விழுக்காடு சேதத்திற்குள்ளானது என்றார் அவர்.

தீயை அணைப்பதற்காக அந்த நெடுஞ்சாலையின் அனைத்து தடங்களும் மூடப்பட்ட காரணத்தால் நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என அவர்  மேலும் சொன்னார்.


Pengarang :