ECONOMYSELANGOR

இணையக் குற்றங்களைத் தடுக்க பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்- மந்திரி புசார்

செலாயாங், செப் 12- அடுத்தாண்டில் மேலும் அதிகமான இணைய பாதுகாப்புத் திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தவுள்ளது. மாநிலத்தில் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்களைத் எதிர்கொள்வதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகையக் குற்றங்களைக் களைவதில் காவல் துறையுடன் தமது தரப்பு அணுக்கமாக ஒத்துழைக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதன் தொடர்பில் தரவு சேகரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டப் பின்னர் அடுத்தாண்டுவாக்கில் விவேக மாநிலத் திட்டத்தில் இணைய பாதுகாப்பு மீதான அம்சங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் சொன்னார்.

குறிப்பிட்ட சில தரப்பினர் சட்டவிரோதமான முறையில் தரவுகளைத் திருடுவதை தடுத்து இதன் காரணமாக அண்மைய காலமாக அதிகரித்து வரும் இணைய மோசடிகளை  முறியடிக்க இயலும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள குவா டாமாயில் வீரதீரச் விளையாட்டு நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இணைய மோசடியில் சிக்குவதைத் தவிர்க்க மிகுந்த கவனப் போக்குடன் இருக்கும்படி பொது மக்களை  அவர் கேட்டுக்  கொண்டார்.

விவேக கைபேசி வழி கிடைக்கும் எந்த தகவலையும் எளிதில் நம்பிவிடக் கூடாது. மாறாக, அதன் நம்பகத்தன்மையை நன்கு ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :