ECONOMYSELANGORTOURISM

சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2023 பட்ஜெட்டில் முன்னுரிமை 

செலாயாங், செப் 12- வரும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களில் சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதற்கு முன்னர் மாநில வரவு செலவுத் திட்டங்களில் சுற்றுலா தொடர்பான அம்சங்கள் மீது கவனம் செலுத்தி வந்தோம். இம்முறை கோவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிந்தைய சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளோம் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை கவரும் இடமாக விளங்குவதை கருத்தில் கொண்டு இங்குள்ள சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

உதாரணத்திற்கு, வீரதீர சாகச நிகழ்ச்சிகளுக்கு புகழ் பெற்ற பத்து கேவ்ஸ்சில் உள்ள குவா டாமாய் தாமான் எக்ஸ்ட்ரீமிமைக் குறிப்பிடலாம். இந்த இடத்தின் மேம்பாட்டை நான் அணுக்கமாக கண்காணித்து வருகிறேன். முன்பு பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. காலப் போக்கில் அதன் தரம் உயர்த்தப்பட்டு வருகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார் அவர்.

இந்த குவா டாமாய் பகுதியில் நாம் இன்னும் சிறிது மதிப்புக் கூட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக, முறையான அறிவிப்பு பலகைகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று  அவர் ஆலோசனை கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டுவதற்கு ஏதுவாக சுற்றுலாத் துறையினருக்கு நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்காக 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்திற்கு 11 கோடியே 46 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த 2022 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல்  செய்த போது மந்திரி புசார் அறிவித்திருந்தார்.


Pengarang :