ECONOMYSELANGOR

தீபாவளியை முன்னிட்டு இந்திய வியாபாரிகளுக்கு வர்த்தக கடனுதவி- சிலாங்கூர் அரசு வழங்குகிறது

ஷா ஆலம், செப் 12- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையின் போது வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவோருக்கு ஐ-பெர்மூசிம் எனப்படும் பருவகால கடனுதவித் திட்டத்தின் கீழ் வர்த்தக கடனுதவி வழங்கப்படும்.

யாயாசான் ஹிஜ்ரா  அறவாரியத்தின் ஆதரவுடன் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ்  வணிகர்களுக்கு 1,000 வெள்ளி முதல் 20,000 வெள்ளி வரை கடனுதவி வழங்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

தீபாவளியின் போது வீட்டிலிருந்து அல்லது தீபாவளி சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்காக இந்த கடனுதவித் திட்டம் விஷேசமாக அறிமுகப்படுத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

பெருநாள் காலத்தின்போது வியாபாரத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்படுவோரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு இத்திட்டத்தை அமல் படுத்தியுள்ளது என்றார் அவர்.

இந்த ஐ-பெர்மூசிம் திட்டத்தின் கீழ் பெறுவோர் சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது பத்தாண்டுகளுக்கும் மேல் மாநிலத்தில் வசிப்பவர்களாக இருப்பது அவசியம். கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் 25 வாரங்கள் அல்லது ஆறு மாதங்களாகும் என ரோட்சியா தெரிவித்தார்.

இந்த கடனுதவித் திட்டத்திற்கு இன்று தொடங்கி அக்டோபர் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான விண்ணப்ப பாரங்களை ஹிஜ்ரா அலுவலகத்தில் அல்லது இணையம் வாயிலாகப் பெறலாம் என அவர் கூறினார்.

சந்தைகளில் வியாபாரம் செய்வோருக்கு 1,000 வெள்ளி முதல் 20,000 வெள்ளி வரை கடனுதவி வழங்கப்படும். எனினும் மற்ற வணிகர்கள் கூடியபட்சம் 5,000 வெள்ளி கடன் பெறலாம் என்றார் அவர்.


Pengarang :