ECONOMYMEDIA STATEMENT

ஹெலிகாப்டர் விபத்தில் விமானி மரணம்- போலீசார் உறுதிப்படுத்தினர்

தாப்பா, செப் 12- சுபாங்கிலிருந்து ஈப்போ நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென காணாமல் போன ஹெலிகாப்டர் பீடோர் அருகே விபத்துக்குள்ளானது இன்று காலை உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதன் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த விமானி ஹெலிகாப்டரின் ஓட்டுநர் இருக்கையில் இறந்த நிலையில் கிடந்ததை மீட்புப் பணியாளர்கள் இன்று காலை 9.30 மணியளவில் கண்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.

அரச மலேசிய ஆகாயப்படையின் ஹெலிகாப்டர் சிக்குஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்  நொறுங்கிய நிலையில் கிடந்த அந்த ஹெலிகாப்டரை இன்று காலை கண்டு பிடித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சம்பவ இடத்தில் தரையிறங்கிய ஐந்து இராணுவ வீரர்கள் விமானியின் இருக்கையில் அந்த ஆடவர் இறந்து கிடந்ததைக் கண்டனர் என்றார் அவர்.

காலை 10.12 மணியளவில் அந்த விமானியின் சடலம் மீட்கப்பட்டு சென்ட், அண்டர்சன் இடைநிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் ஈப்போ ராஜா பெர்மைசூரி துங்கு பைனோன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அந்த ஹெலிகாப்டரை செலுத்தியவர் ஹாங்காங்கை  சேர்ந்த ஷீ கின் ரிச்சர்ட் சான் என அடையாளம் காணப்பட்ட வேளையில் அவரின் மறைவு குறித்து குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் நிறுவனம் தகவல் தெரிவித்து விட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

சுபாங்கிலிருந்து நேற்று பிற்பகல் 12.16 மணியளவில் ஈப்போ நோக்கி புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் பிற்பகல் 12.37 மணியளவில் பீடோர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்தது.


Pengarang :