ECONOMYMEDIA STATEMENT

வெ.12,000 நிதி மோசடி- அரசாங்க உயர்கல்விகூட விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப் 12– பொய்யான பண கோரிக்கையை முன்வைத்தது தொடர்பில் பொது உயர்கல்விகூட விரிவுரையாளர் ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

வாகன வாடகை மற்றும் புவியியல் உபகரணங்கள் கொள்முதல் தொடர்பில் 12,488 வெள்ளிக்கான பொய்யான பணக் கோரிக்கையை தாக்கல் செய்ததாக நீதிபதி ரோஸினா ஆயோப் முன்னிலையில்  கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஹபிஷ் அப்துல் அஜிஸ் (வயது 45) என்ற அந்த விரிவுரையாளர் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 மற்றும் ஜூலை 29 ஆம் தேதிக்கு இடையே மூன்று வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தியதாக கூறி ஏழு பணக் கோரிக்கைகளை முன்வைத்ததாக மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான ஹபிஷ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுச் சிறைத்தண்டனை லஞ்சத் தொகைக்கு ஐந்து மடங்கு குறையாத அல்லது 10,000 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

மேலும், வாகன வாடகை தொடர்பில் ஏழு ரசீதுகள் மற்றும் உபகரணங்கள் வாங்கியது தொடர்பில் இரண்டு ரசீதுகளை அவை போலியானவை எனத் தெரிந்தும் தாக்கல் செய்ததாக அவருக்கு எதிரான ஒன்பது தேர்வுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


Pengarang :