ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ள அபாய எச்சரிக்கை- முழு விழிப்பு நிலையில் கிள்ளான் வட்டார மக்கள்

கிள்ளான், செப் 13- இம்மாதம் மத்தியிலிருந்து வரும் டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கு அபாயத்தை கருத்தில் கொண்டு கிள்ளான் மாவட்ட மக்கள் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.

இக்காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய வடமேற்கு பருவமழையின் மாற்றம் காரணமாக கடுமையான  மழைப்பொழிவு ஏற்பட்டு கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்டதைப் போல் இவ்வாண்டும் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்களில் ஒருவரான பகாருடின் அலியாஸ் (வயது 64) கூறினார்.

நான் காப்பார், தோக் மூடா பகுதியில் கடந்த முப்பது வருடங்களாக வசிக்கிறேன். இதுவரை இங்கு வெள்ளம் ஏற்பட்டதேயில்லை. கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்டதைப் போல் மறுபடியும் மற்றொரு வெள்ளப் பேரிடர் ஏற்படக்கூடாது என வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

எனினும், கடல் பெருக்கு குறித்து எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்துள்ளதால் நாங்களும் முழு தயார்  நிலையில் உள்ளோம். குறிப்பாக, பிறப்பு பத்திரம், நிலப்பத்திரம் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில்  வைத்திருக்கிறோம் என்றார் அவர்.

வெள்ளப் பிரச்னையை சமாளிப்பதற்கு ஏதுவாக கால்வாய் மற்றும் வடிகால்கள் குப்பைகளால் அடைபடாமலிருப்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கம்போங் காப்பார் கிராம சமூக நிர்வாகக் குழுவின் தலைவர் முகமது பவுசி அரிபின் (வயது 54) தெரிவித்தார்.

மழை தொடர்ந்து பெய்யும் காலங்களில் நீர் தங்கு தடையின்றி கால்வாய்களில் சீராக ஓடுவதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

கம்போங் காப்பாரில் 24,000 பேர் வசித்த போதிலும் அவர்களில் 500 பேர் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். எனினும், கால்வாய்கள், மற்றும் நீரோடைகள் சீர் செய்யப்படாவிட்டால் அருகிலுள்ள வீடமைப்புப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :