ECONOMYSELANGOR

உணவு வளங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் மலேசியாவுக்கு தேவை- ஜமாலியா வலியுறுத்து

ஷா ஆலம், செப் 15- பருவநிலை மாற்றத்தினால் உணவு உத்தரவாதத்திற்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் கூட்டரசு அரசும் மாநில அரசும் முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றம் ஏற்படும் பட்சத்தில் உணவு விநியோகம் போதுமான அளவு இருக்குமா? என்பதே தமது தலையாய கவலையாகும் என்று பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

மலேசியாவைப் பொறுத்த வரை நாம் உணவுத் தேவைக்கு பிற நாடுகளை சார்ந்திருக்கிறோம். பருநிலை மாற்றம் என்பது உஷ்ண நிலை சில பாகை அதிகரிக்கக்கூடிய விஷயம் என்றும் குளிர்சாதனத்தை இயக்கினால் அப்பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டு விடும் ஒரு சிலர் நினைக்கின்றனர். ஆனால்,உண்மை அதுவல்ல.

ஒன்று அல்லது இரண்டு பாகை உஷ்ணம் அதிகரித்தாலும் பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும். மழைப் பொழிவு அதிகரித்து விவசாயம் முற்றாக பாதிக்கப்படும் என்றார் அவர்.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக் கூடிய சீதோஷ்ணநிலை மாற்றங்கள் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலிருப்பதை உறுதி செய்யக் கூடிய தொழில்நுட்பத்தை கண்டு பிடிப்பதில் நாம் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் ஆலோசனை கூறினார்.

இந்த பருவநிலை மாற்றம் வேளாண் துறையை மட்டுமே சார்ந்திருக்கும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :