ECONOMYSELANGOR

மாநில அரசின் திட்டங்கள் இலக்கை அடைவதை உறுதி செய்ய கே.பி.ஐ. முறை அமல் செய்யப்பட வேண்டும்

ஷா ஆலம், செப் 15- மாநில அரசு அமல்படுத்தும் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதை உறுதி செய்வதற்காக கே.பி.ஐ. எனப்படும் அடைவு நிலைக்கான முதன்மை குறியீட்டு முறை அமல் செய்யப்பட வேண்டும் என பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை கூறியுள்ளார்.

திட்டங்களின் சீரான அமலாக்கத்தை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு திட்டமும் அவ்வப்போது கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாவதாக ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

நாம் அமல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் கே.பி.ஐ. தேவை. இவ்விவகாரத்தை நான் மாநில சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளேன். மாநில அரசும் அதனை கவனத்தில் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உதாரணத்திற்கு சுழியம் கார்பன் வெளியேற்றத்தைக் குறிப்பிடலாம். இதனை அமல்படுத்துவதற்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால அடிப்படையில் நாம் என்ன செய்துள்ளோம்? இந்த திட்டம் இலக்கை அடைந்துள்ளதை நாம் எவ்வாறு உறுதி செய்யப் போகிறோம்? என அவர் கேள்வியெழுப்பினார்.

மீடியா சிலாங்கூர் வாயிலாக ஒளிபரப்பான பேரிடரை எதிர்கொள்வதற்கான தயார் நிலை எனும் தலைப்பிலான ஸ்கோப் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

இதுவரை மாநில அரசின் அனைத்து திட்டமிடல்களும் சிறப்பானவையாக உள்ளதாக கூறிய அவர், எனினும், அந்த முயற்சிகளை மேலும் செம்மைப்படுத்த கே.பி.ஐ. முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளனவா என்பதை கண்காணிக்க நமக்கு அதிகாரிகள் தேவைப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :