ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சுல்தான் விருப்பத்திற்கேற்ப சிறப்புக் குழந்தைகளுக்கான வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும்

ஷா ஆலம், செப் 18-   சிறப்புக் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகளுடன் நூலகம் இருக்க வேண்டும் என்ற மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தானின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு சிலாங்கூர் பொது நூலகக் கழகம்  மூலம் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின்  விருப்பத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நூலகங்களில் அமல்படுத்துவதற்கு  முன்னர், இங்குள்ள ராஜா துன் ஊடா நூலகத்தின் 2B கட்டடத்தில் முதலில் செயல் படுத்தப்படும்  என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

இது ஒரு நூலகமாக மட்டுமின்றி  இந்த சிறப்புக் குழந்தைகளுக்கான ஓரிட மையமாகவும் செயல்படும்.

சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களும் பயன்பெறுவதற்கு ஏதுவாக மாநிலத்திலுள்ள  ஒவ்வொரு மாவட்ட நூலகமும் ஒரே மாதிரியான வசதிகளைக் கொண்டிருப்பதை அரசு உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.

இந்த தனித்துவமான முன்னெடுப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதோடு  மற்றும் எதிர்காலத்தில் சமூகத்திற்கு நிச்சயமாக பெரும் பயனளிக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூல் பதிவில் கூறினார்.

சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறையும் இந்த நூலக மேம்பாட்டுத் திட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜா துன் ஊடா நூலகத்தின்  2B கட்டிடத்தைக் கட்டுவதற்கு மாநில அரசு  கடந்தாண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாக அவர் தெரிவித்தார்.


Pengarang :