ECONOMYMEDIA STATEMENT

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காணாமல் போன சிங்கப்பூரியர் மீட்கப்பட்டார்

ஜோகூர் பாரு, செப் 19– கோத்தா திங்கி, பந்தி தீமோர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மலையேறும் நடவடிக்கையின் போது காணாமல் போன சிங்கப்பூரியர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டார்.

கடும் முயற்சிக்குப் பின்னர் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் சொந்தமாக காட்டிலிருந்து வெளியேறிய ஜேசன் ரென் ஜி (வயது 30) என்ற அந்த ஆடவரை பொது மக்கள் கண்டு தங்களுக்கு தகவல் தெரிவித்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஹூசேன் ஜமோரா கூறினார்.

கோத்தா திங்கி-மெர்சிங் சாலையின் 52வது கிலோ மீட்டரில் குபு ஜெப்புன் அருகே அந்த ஆடவர் கண்டுபிடிக்கப்பட்டத் தகவலை நாங்கள் பிற்பகல் 2.22 மணியளவில் பெற்றோம் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

காணாமல் போன ஜேசனைத் தேடும் பணி நேற்று இரண்டாவது நாளாக போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், தென் ஜோகூர் பிராந்திய வன இலாகா மற்றும் கோத்தா திங்கி பொது தற்காப்பு படை ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நுழைவதற்கான அனுமதியைப் பெறாத காரணத்தால்  ஜேசனும் அவரின் நண்பரும் வன இலாகாவிடம் ஒப்படைக்கப்படுவர் என்று சூப்ரிண்ட். ஹூசேன் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட விரும்புவோர் முன்கூட்டியே கோத்தா திங்கி வன  அலுவலகத்தில் முறையான அனுமதியைப் பெறுவதோடு தங்களின் நடவடிக்கை குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலும் தகவல் கொடுக்கும்படி பொது மக்களை  அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :