ECONOMYMEDIA STATEMENT

போதைப் பொருள் விநியோகிப்பாளர்கள் இருவர் கைது- வெ.90,000 போதைப் பொருள் பறிமுதல்

பெட்டாலிங் ஜெயா, செப் 20-  இம்மாதம்  13ஆம் தேதி இங்கு அருகிலுள்ள டாமன்சாரா அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட இரு  சோதனை நடவடிக்கைகளில் இரு ஆடவர்களைக் கைது செய்த போலீசார் 91,610 வெள்ளி மதிப்புள்ள  32 கிலோகிராம்  போதைப்பொருள்கள்  பறிமுதல் செய்தனர்.

மாலை 5.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில்  நடந்த முதலாவது சோதனையில் 40 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் பக்ருடீன் அப்துல் ஹமீட் கூறினார்.

அந்த சந்தேக நபரின் காரின் பின்புறம் பொருள் வைக்குமிடத்தில் 31,368 கிராம்  எடையுள்ள 31 போதைப் பொருள் பொட்டலங்கள்  கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த போதைப் பொருள் நாட்டின் வடக்கில் இருந்து புதிதாக பெறப்பட்டதாக நம்பப்படுகிறது என்று நேற்று  இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார்  30 நிமிடங்களுக்குப் பிறகு அதே இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 31 வயதுடைய இரண்டாவது சந்தேக நபரை கைது செய்தனர் என்றார் அவர்.

அந்த வீட்டின் அறை மற்றும் சமையலறையில் 184 போதை  மாத்திரைகள் மற்றும் 130 கிராம் ஷாபுவை போலீசார் கண்டுபிடித்தனர் என்று அவர் அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டாவது சந்தேக நபர் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு மட்டுமே விடுவிக்கப்பட்டார் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

இரண்டு சோதனைகளிலும் தங்கச் சங்கிலி, போதைப்பொருள் விற்பனையின் விளைவாக வாங்கப்பட்டதாகக் கருதப்படும் ஹோண்டா சிட்டி வகை கார் மற்றும் 34,500  ரிங்கிட் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமது பக்ருடீன் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் ரொக்கத் தொகையின் 193,510 ரிங்கிட் ஆகும். இரண்டு சந்தேக நபர்களும் கடந்த மூன்று மாதங்களாக போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது என்றார்.

அவ்விருவரும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்  39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் சொன்னார்.


Pengarang :