ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்றம் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது

ஷா ஆலம், செப்ட் 19: கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளம் பேரிடரில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. புக்கிட் லஞ்சோங்கில் 1,700 வீடுகள், கம்போங் பாரு ஹைக்கோம் (4,000 வீடுகள்), தாமான் ஸ்ரீ மூடா (9,000 வீடுகள்), அருகிலுள்ள பத்து 8இல், தாமான் டேசா கெமுனிங், தாமான் புக்கிட் இன்டா, தாமான் பூங்கா ராயா, தாமான் கெமுனிங் உத்தாமா, தாமான் முத்தியாரா கெமுனிங், தாமான் புக்கிட் ரிமாவ் ஆகிய இடங்களில் இன்னும் 4,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்காத அளவுக்கு கடும் மழை மற்றும் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு போன்ற பல எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மானிய ஒதுக்கீட்டில் கம்போங் புக்கிட் லஞ்சோங் புத்ரா ஹைட்ஸ்ஸில் இருக்கும் 1,700 வீட்டு பகுதியில் உள்ள வெள்ளத் தடுப்பணைகள் சரிசெய்யப்பட்டு மற்றும் பம்ப் ஹவுஸ் பொருத்தப்பட்டது என்று வீ. கணபதிராவ் தெரிவித்தார்.

அதேபோல், கம்போங் பாரு ஹைக்கோமில் வெள்ளத் தடுப்பணைகள் கட்டப்பட்டது, ஆனால் பம்ப் ஹவுஸ் இன்னும் கட்டப்படவில்லை. மேலும், ஸ்ரீ மூடாவில் பிரம்மாண்டமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய பம்ப் ஹவுஸ் பொருத்தப்பட்டு வருகிறது என்றார்.

ஸ்ரீ மூடாவுக்காக மட்டும் எம்பிஎஸ்ஏ RM2.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அவர்கள் சில முக்கிய கால்வாய்களையும் அகலப்படுத்துவதும் சீரமைத்தும் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், 4 முக்கிய இடங்களை தேர்ந்தெடுத்து தனியாக பம்ப ஹவுஸ் கட்டவுள்ளது. இவ்வாறான திட்டங்கள் மூலம் மக்கள் நிம்மதி பெரு மூச்சி விட முடியும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தும் திட்டம் வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :