ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தை எதிர்கொள்ள சிறப்பு செயற்குழு – எம்.பி.எஸ்.ஏ. தொடங்கியது

ஷா ஆலம், செப் 21- இவ்வாண்டு இறுதியில் வெள்ளம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை எதிர்கொள்வதற்கு சிறப்பு பேரிடர் செயற்குழுவை ஷா ஆலம் மாநகர் மன்றம் உருவாக்கியுள்ளது.

பந்தாஸ் எனப்படும் விரைவு நடவடிக்கை குழுவின் செயலாக்க அறையில் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு ஏதுவாக முழு தயார் நிலையில் உள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்த தகவலை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உதவிகளை விரைந்து வழங்குவதற்கு ஏதுவாக நாங்கள் முழு தயார் நிலையில் உள்ளோம் என அவர் சொன்னார்.

எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதற்கு ஏதுவாக தனது தரப்பு அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு துறைகளுடன் தொடர்பில் உள்ளதோடு வானிலை அறிக்கையையும் அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ள நிவாரண மையங்களாகச் செயல்படக் கூடிய இடங்களை அடையாளம் காண்பதிலும் அவற்றில் முழுமையான வசதிகள் உள்ளதையும் உறுதி செய்யும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

பொது மண்டபங்கள் மற்றும் சமூக மண்டபங்கள் தவிர்த்து வெள்ளம் ஏற்படும் இடங்களில் உள்ள வசதிகளுடன் கூடிய மையங்கள் தற்காலிக நிவாரண மையங்களாக பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்படுவோர் சௌகரியமான சூழலில் தங்க வைக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆகவே தற்காலிக நிவாரண மையங்கள் சுத்தமாகவும் நீர் விநியோகம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டவையாகவும் உள்ளதை உறுதி செய்யவிருக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :