ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சபாக் பெர்ணமில் தற்காலிக சுகாதார கிளினிக்குகளை நிர்மாணிக்க சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர், செப் 27- இம்மாதம் 13 ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் சேதமுற்ற சுகாதார கிளினிக்கிற்கு பதிலாக சபாக் பெர்ணம், பாரிட் பாருவில் தற்காலிக கிளினிக்கை நிறுவுவதற்காக சுகாதார அமைச்சு அவசர நிதியாக 16 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சுகாதார கிளினிக்கை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அந்த தற்காலிக கிளினிக் 10 வாரங்களில் நிர்மாணிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தனது டிவிட்டர் பதிவில் கூறியது.

அத்தீவிபத்தில் அந்த கிளினிக்கின் மருத்துவ அதிகாரியின் (எம்.ஓ.) அறை, வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஆய்வுக்கூடம், மருந்தக காத்திருப்பு இடம் மற்றும் தாய் சேய் கிளினிக் ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டன.

இதனிடையே, இம்மாதம் 21 ஆம் தேதி ஏற்பட்ட மற்றொரு தீவிபத்தில் சேதமுற்ற சபாக் பெர்ணம், பத்து 4, செபிந்தாஸ் கிளினிக் டேசா சுகாதார மையம் 481,000 வெள்ளி செலவில் மறுநிர்மாணிப்பு செய்யப்படும் என்று கைரி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

வட்டார மக்களின் நலனுக்காக அந்த கிளினிக் டேசா சுகாதார மையத்தை உடனடியாக நிர்மாணிப்பதற்கு ஏதுவாக அவசரகால அடிப்படையில் 481,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டிற்கு நான் அங்கீகாரம் அளித்துள்ளேன் என அவர் சொன்னார்.


Pengarang :