ECONOMYMEDIA STATEMENT

சிறார்கள் கடத்தலா? தவறானத் தகவல்களைப் பரப்புவதை நிறுத்துவீர்- இணையவாசிகளுக்கு அறிவுறுத்து

கோத்தா பாரு, செப் 27– பொது மக்கள் மத்தியில் அச்சமும் குழப்பமும் ஏற்படுவதை தவிர்க்க சிறார்கள் கடத்தப்படுதாக கூறப்படும் தகவல்களை பரப்ப வேண்டாம் என மாநில மக்களை குறிப்பாக இணையத்தளவாசிகளை கிளந்தான் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பள்ளி வளாகங்களில் சிறார்கள் கடத்தப்படுவதாக அல்லது அவர்களைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளி வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது ஜாக்கி ஹருண் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் இத்தகைய செய்திகள் காரணமாக அரச மலேசிய போலீஸ் படை குறிப்பாக கிளந்தான் போலீஸ் விசாரணையைத் தொடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

பள்ளி வளாகங்கள் அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் உள்ளதாக வெளிவந்த தகவல்களின் பேரில் நாங்கள் விசாரணையை மேற்கொண்டோம். எனினும், சிறார் கடத்தல் அல்லது கடத்தல் முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் எந்த ஆதாரமும் எங்கள் விசாரணையில் கண்டறியப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்றத் தகவல்களைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகையச் செயல்களைப் புரிவோர் மீது 1998 ஆம் ஆண்டு தகவல் மற்றும் பல்லூடக சட்டத்தின் 233ஆம் பிரிவின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஓராண்டு வரையிலானச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றார் அவர்.


Pengarang :