ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கோல குபு பாரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எம்.பி.ஐ. வெ.44,000 ஒதுக்கீடு

உலு சிலாங்கூர், செப் 27- இவ்வாண்டு மே மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கோல குபு பாரு தொகுதியைச்  சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு உதவ சிலாங்கூர் மந்திரி புசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகம் 43,800 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த ஒதுக்கீட்டைக் கொண்டு கம்போங் ஜாவா, கம்போங் பாசீர், கம்போங் ஆயர் பானாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 146 குடும்பங்களுக்கு தலா 300 வெள்ளி பகிர்ந்தளிக்கப்படும் என்று எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் வழங்கிய பெயர்ப் பட்டியலின் அடிப்படையில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த நிதியுதவியை செய்கிறோம். இத்தகைய வெள்ளப் பிரச்னை மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மாநில அரசு வரைந்து வருகிறது என்று அவர் சொன்னார்.

கெர்லிங், கம்போங் ஜாவாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து  கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, நான்கு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமனதுடன் உதவி நிதி வழங்க முன்வந்த மாநில அரசின் துணை நிறுவனமான எம்.பி.ஐ.க்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கீ ஹியோங் கூறினார்.

தங்களுக்கு பரிவுடன் உதவி நல்கிய தரப்பினருக்கு குடியிருப்பாளர்கள் நன்றி கூற வேண்டும். வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு இந்த உதவித் தொகை போதுமானதாக இல்லாவிட்டாலும் ஓரளவு அவர்களின் சுமையைக் குறைப்பதில் துணை புரியும் என்றார் அவர்.


Pengarang :