ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலில் சிக்கிய 110 பேர் மீட்பு

கோலாலம்பூர், செப் 30- வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறிய கும்பலின் ஆசை வார்த்தையில் ஏமாந்த 110 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நுர்ஷியா சாடுடின் கூறினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான தரவுகளின்படி வெளிநாடுகளில் இன்னும் 174 மலேசியர்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைத் பெற்றுத் தருவதாக கூறிய கும்பல்களின் ஆசை வார்த்தையை நம்பி 284 பேர் ஏமாந்தது தொடர்பில் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சகாக்களிடமிருந்து 224 புகார்களை அக்காலக்கட்டத்தில் தாங்கள் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலை வாய்ப்பு மோசடிகளை தடுப்பதற்காக தமது தரப்பு இண்டர்போல் மற்றும் ஆசியான்போல் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைப்பை நல்கி வருகிறது. இது தவிர, உள்துறை அமைச்சின் தலைமையில் சிறப்பு செயல்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி நுர்ஷியா  பொது மக்களைக் கேட்டுக் கொண்டார். சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் மற்றும் முதலாளிகளின் நம்பகத் தன்மை குறித்து வெளியுறவு அமைச்சுடன் உறுதி செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அக்கும்பல்களின் நடவடிக்கை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து உதவுமாறும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :