ECONOMYSELANGOR

வெள்ளத்தை எதிர்கொள்ள 10,000 நிவாரண மையங்கள் தயார்- அமைச்சர் ரீனா ஹருண் தகவல்

ஷா ஆலம்,  அக் 3– இந்த ஆண்டு இறுதியில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும்  வெள்ளப் பேரிடருக்குத் தயாராகும் வகையில் உறைவிடப் பள்ளிகளும் பயன்படுத்தப்படும் பட்சத்தில், 10,000க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்கள் (பிபிஎஸ்) அரசு பதிவேட்டில் வெளியிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க தனது அமைச்சு நாடு முழுவதும்  இதுவரை 6,010 தற்காலிக மையங்களை அடையாளம் கண்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா முகமது ஹருண் கூறினார்.

இவற்றில் பள்ளிகள், பாலாய் ராயா மற்றும் மண்டபங்களும் உள்ளடங்குவதாகவும், அதே நேரத்தில் இந்த வசதிகள் வாக்களிக்கும் மையங்களாகவும், வாக்களிக்கும் மாவட்ட மையங்களாகவும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனால்தான் தற்போதைய சூழ்நிலையில் நாம் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும். இப்போது தேர்தல் நடந்தால், வெள்ளம் வரும் என்று கணிக்கும் நேரத்தில் அது இருக்கும் என்று அர்த்தம்.

நாம் அவற்றை பி பி.எஸ். மையங்களாக  மாற்ற விரும்புகிறோமா? அல்லது வாக்களிப்பதற்கான இடமாக மாற்ற விரும்புகிறோமா? தேர்தலை குறிவைத்து  எங்களின்  உணர்வு கொளுந்துவிட்டு எரிகிறது, ஆனால் பிரச்சனைகளின் போது மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

நேற்று இங்கு சிலாங்கூர் பெர்சத்து கட்சியின் தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைக்கும் விழாவில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் இன்று தொடங்கி நவம்பர் மாதம் வரை ஏற்படக்கூடிய பருவமழையின்  காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் வலுவற்ற கட்டுமானங்களுக்கு சேதம் உண்டாகும்  சாத்தியம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


Pengarang :