சுங்கை காபுல் ஆற்றில் நீர் மாசுபாடு கண்டுபிடிப்பு- நீர் விநியோகத் தடை இல்லை

ஷா ஆலம், அக் 2- பெரேனாங், சுங்கை காபுலில் நுரையுடன் கூடிய வெண்மை நிற நீர் வெளியேற்றப்பட்டதை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கண்டறிந்துள்ளது. எனினும் இந்த மாசுபாடு சம்பவம் முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்படும் அபாயம் தடுக்கப்பட்டது.

சுங்கை லங்காட் வடிநிலப் பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் லுவாஸ் மற்றும் ஸ்பான்  எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் மேற்கொண்ட வழக்கமான கூட்டு சோதனை நடவடிக்கையில் இந்த நீர் மாசுபாடு கண்டறியப்பட்டதாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

மாநில சுற்றுச்சூழல் துறையும் காஜாங் நகராண்மை கழகமும் மேற்கொண்ட சோதனையில் அந்த நீரில் துர்நாற்றம் கண்டறியப்பட்டதோடு ஆற்று நீரும் வழக்கம் போல் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து மக்கோத்தா தொழில்பேட்டைப் பகுதியில் இயங்கி வரும் கட்டுமானப் பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மீது சுற்றுச்சூழல் துறையும் காஜாங் நகராண்மைக் கழகமும் சோதனை மேற்கொண்டன. காபுல் ஆற்றில் காணப்பட்ட அதே வெண்மை நிற நீர் அந்த தொழிற்சாலையிலும் கண்டறியப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அதே சமயம் அப்பகுதியிலுள்ள அலுமினியத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிலிருந்து அந்த வெண்மை நிற நீர் வெளிப்பட்டு அருகிலுள்ள கால்வாயில் கலந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவ்விரு இடங்களிலும் இருந்து எடுக்கப்பட்ட நீரின் மாதிரி சோதனைக்காக  இரசாயன இலாகாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :