ANTARABANGSAECONOMYSUKANKINI

இந்தோ. கால்பந்தாட்ட பேரிடர்- இறந்தவர்களில்  17  சிறார்களும் அடங்குவர்

மாலாங், அக் 3- இந்தோனேசியாவின் கால்பந்தாட்ட அரங்கில் நிகழ்ந்த கலவரத்தின் போது மிதியுண்டு மாண்ட 125 பேரில் 17 சிறார்களும் அடங்குவர் என அதிகாரிகள் கூறியுள்ள வேளையில் உலகின் மிக மோசமான விளையாட்டரங்க  பேரிடர் எவ்வாறு நிகழ்ந்தது என விளக்குமாறு அந்த தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா போன்ற பெரு நகரங்களில் கால்பந்தாட்டத்தின் போது வன்முறையும் அடாவடித்தனம் நிகழ்வது வழக்கமான ஒன்றாகும். எனினும், சிறிய நகரான கிழக்கு ஜாவாவில் நிகழ்ந்த இந்த பேரிடர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இப்படி ஒரு பேரிடர் நிகழும் என்று நானும் என் குடும்பத்தாரும் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்த கலவரத்தில் தன் இரு சகோதரர்களை பறிகொடுத்த எண்டா வாஹ்யுனி வேதனையுடன் குறிப்பிட்டார்.

அவ்விருவரும் கால்பந்தாட்டத்தை வெகுவாக நேசித்தனர். அரிமா குழுவின் ஆட்டத்தை அவர்கள் அரங்கிற்கு சென்று நேரடியாக கண்டுகளித்தனர் என்று அவ்விருவரின் சவ அடக்க சடங்கின் போது அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் உண்மைக் கண்டறியும் குழுவை அரசாங்கம் அமைக்கும் என்று இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் மாபுட் எம்டி கூறினார். இந்த குழுவில் கல்விமான்கள், கால்பந்து நிபுணர்கள், அரசாங்கம் அதிகாரிகள் இடம் பெற்றிருப்பர் என்றார் அவர்.

இந்த கலவரத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டறியும் நோக்கிலான இந்த விசாரணை அடுத்த சில வாரங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்த சனிக்கிழமை இரவு அரிமா எப்சி குழுவுக்கும் பெர்செபாயா சுராபாயா குழுவுக்கும் இடையே நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் அரிமா குழு 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து திடலில் பெரும் கலவரம் வெடித்தது.


Pengarang :