ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கோத்தா கெமுனிங்கில் பழுதடைந்த வெள்ளத் தடுப்பணைகள் சீரமைப்பு- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், அக் 4- கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ள பழுதடைந்த தடுப்பணைகள் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக சீரமைக்கப்பட்டன.

கம்போங் புக்கிட் லஞ்சோங்,  லஞ்சோங் ஜெயா, ஆலம் மேகா, கம்போங் பாரு ஐக்கோம், தாமான் ஸ்ரீ மூடா ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் சீரமைப்பு செய்யப்பட்டதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் சொன்னார்.

கடுமையான  மழை பெய்யும் சமயங்களில் ஆற்று நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை இதன் மூலம் தடுக்க முடியும் என நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

இந்த தடுப்பணை சீரமைப்பு தவிர்த்து ஷா ஆலம் மாநகர் மன்றம் 2.8 கோடி வெள்ளி செலவில் கான்கிரீட் கால்வாய்களை அமைப்பது கால்வாய்களைத் துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், பல இடங்களில் பம்ப் ஹவுஸ் எனப்படும் நீர் அழுத்த மையங்களை அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை எனக் கூறிய அவர், கடல் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிகளை விரைவுபடுத்தும்படி தாம் சம்பந்தப்பட்டத் தரப்பினரை கேட்டுக் கொண்டுள்ளதாக சொன்னார்.

சிலாங்கூரில் 1,000 கோடி வெள்ளி செலவில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் வலியுறுத்தினார்.

மாநிலத்தில், குறிப்பாக எனது தொகுதியில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வெள்ளத் தடுப்பு திட்டம் எதனையும் நான் காணவில்லை. அவர்கள் வெறும் வாய்ச்சவடால் பேசாமல் ஆக்ககரமான திட்டங்களை முன்கூட்டியே மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

கிள்ளான் ஆற்றோரம் நெடுகிலும் முன்னதாகவே முறையான வெள்ளத் தடுப்புத் திட்டங்களை அமல்படுத்தியிருக்க வேண்டும். இன்னொரு வெள்ளம் வந்தால் ஸ்ரீ மூடா பகுதி அதற்கு மறுபடியும் பலியாகும் என நான் அஞ்சுகிறேன் என்று அவர் சொன்னார்.


Pengarang :