ECONOMYSELANGOR

வர்த்தக ஒருங்கமைப்பு, திறனை வளர்த்துக் கொள்ளும் தளமாக உச்சநிலை மாநாடு விளங்கும்

ஷா ஆலம், அக 4- மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (சிப்ஸ் 2022) தொழில் முனைவோர் அறிவாற்றலையும் வர்த்தக ஒருங்கமைப்பையும் வளர்த்துக் கொள்வதற்குரிய தளமாக விளங்கும்.

வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ள இந்த மாநாடு அனைத்துலக வர்த்தக சமூகத்தின் பங்கேற்புடன் கூடிய பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அறிவாற்றலையும் வர்த்தக ஒருங்கமைப்பையும் வளர்த்துக் கொள்வதில் தொழில்முனைவோர், வணிகர்கள், கல்விமான்கள் மற்றும் பொது மக்களுக்கு இந்த மாநாடு சரியான தளமாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

இந்த சிப்ஸ் 2022 மாநாட்டில் பங்கேற்பதற்கு இப்போதே பதிந்து கொள்ளுங்கள். இந்த மாநாட்டின் நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை https://selangorsummit.com/ எனும் அகப்பக்கம் வாயிலாக காணுங்கள் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இம்மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உச்சநிலை மாநாட்டில் 850 கண்காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 20 விழுக்காடு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாள் மாநாட்டின் வழி 35 கோடி வெள்ளி வர்த்தகத்தையும் 35,000 வருகையாளர்களையும் ஈர்க்க மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.

கடந்த ஏழாண்டுகளில் நடைபெற்ற இந்த உச்சநிலை மாநாடுகளின் வழி 113 கோடி வெள்ளி வர்த்தகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடுகளில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக 2,951 கண்காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட வேளையில் இதுவரை 95,451 வருகையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


Pengarang :