ECONOMYMEDIA STATEMENT

வெடி மருந்து வைத்திருந்த, அனுமதியின்றி மீன் பிடித்த குற்றத்திற்கு மீனவருக்கு வெ.11,000 அபராதம்

ஜோகூர் பாரு, அக் 6- வெடி மருந்து வைத்திருந்தது உள்பட மூன்று குற்றங்களைப் புரிந்ததை ஒப்புக் கொண்ட மீனவர் ஒருவருக்கு கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றம் 11,000 வெள்ளி அபராதம் விதித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி மெர்சிங், தஞ்சோங் செலாந்தாய் பகுதியிலிருந்து 0.2 கடல் மைல் தொலைவில் உள்நாட்டு மீனவப் படகு ஒன்றில் அனுமதியின்றி இமுலெக்ஸ் வகை வெடி மருந்தை வைத்திருந்ததாக அப்துல் கபார் அப்துல் லத்திப் (வயது 48) என்பவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்க வகை செய்யும் 1957 ஆம் ஆண்டு வெடிமருந்துச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக மலேசிய கடல் அமலாக்க நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

அன்றைய தினம் இரவு 11.00 மணியளவில் முறையான லைசென்ஸ் இன்றி மீன் பிடித்ததோடு மீன் பிடி சாதனங்களையும் வைத்திருந்ததாக அவர் மற்றொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியிருந்தார்.

முதல் குற்றத்திற்கு 10,000 வெள்ளி அபராதமும் இரண்டாவது குற்றத்திற்கு 1,000 வெள்ளி அபராதமும் விதிப்பதாக நீதிபதி நோர்ஷியா ஊஜாங் தனது தீர்ப்பில் கூறினார்.

அந்த ஆடவருக்கு சொந்தமான படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை பறிமுதல் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.


Pengarang :